×

நேபாளம் முழுவதும் பப்ஜி விளையாட்டிற்கு தடை: பெற்றோர்களின் தொடர் புகார்களால் அரசு அதிரடி நடவடிக்கை

காத்மாண்டு: பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி வருவதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விளையாட்டு மூலம் நிறைய குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாகவும், விளையாடுபவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல, பப்ஜி விளையாட்டின் மூலமாக மாணவர்கள் சரியாக அவர்களின் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை, தேர்வுகளிலும் சரியாக கவனம் செலுத்துவதில்லை என பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்தியாவில், குஜராத் அரசு இந்த விளையாட்டை ஏற்கெனவே தடை செய்துள்ளது. இன்னும் சில மாநிலங்கள் இந்த விளையாட்டை தடை செய்ய தீவிரமாக யோசித்து வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் முதலாமாண்டு படிக்கும் மாணவர், தனது கல்லூரி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தெரியாததால், பப்ஜி விளையாடுவது எப்படி என்று எழுதியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் 2ம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவன் இரவு பகல் என்று பாராமல் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளார். இதன் காரணமாக, அவரது மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு இறுதியில் உயிரிழந்தார். இந்த காரணங்களால் பப்ஜி விளையாட்டிற்கு தடை விதிக்கும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு மாநிலமும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பப்ஜி விளையாட்டை நாடு முழுவதும் தடை விதித்து நேபாளம் அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நேபாள நாட்டின் தொலைதொடர்பு துறை துணை இயக்குநர் சந்தீப், சிறுவர்களையும், இளைஞர்களையும் அடிமைப்படுத்தும் பப்ஜி விளையாட்டை தடை செய்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும், பப்ஜி தடை நேற்று முதலே அமலுக்கு வந்துள்ளது என்றும் தெரிவித்தார். பெற்றோர்களுக்கு பப்ஜி விளையாட்டு தலைவலியாகவே உள்ளது. தங்களது பிள்ளைகளை அதிக நேரத்தை இந்த விளையாட்டில் செலவழிப்பதாகவும், விளையாட்டுக்கு அடிமையாகவதாகவும் தொடர்ந்து புகார் அளித்தனர். பெற்றோர்களின் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nepal ,Parents , Nepal, Bhajji Sports, Ban, Parents, Complaint, Nepalese Government
× RELATED மரம் வளர்ப்போம்! பறவைகளை காப்போம்!...